புதுச்சேரியில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மாநிலத்தில் 19,510 ஹெக்டேர் நிலப் பரப்பில் விவசாயம் செய்யப் படுகிறது. இத்தொழிலில் சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளன. இவர்கள் மூலம் 1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் விவசாயத்திற்கு ஆதாரமான உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் மற்றும் ஆட்கள் கூலி ஆண்டுக்கு ஆண்டு பல மடங்கு உயர்ந்து வருகிறது.ஆனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருட்களின் விலை மட்டும் சொற்ப அளவிலேயே உயர்த்தப்பட்டு வருகிறது.கடந்த 2010ம் ஆண்டு, பொட்டாஷ் உரம் மூட்டை ரூ.280; டி.ஏ.பி., ரூ.450, காம்ப்ளக்ஸ் ரூ.,450, யூரியா (50 கிலோ மூட்டை) ரூ.220;, கலைக்கொள்ளி ரூ.440க்கு விற்பனை ஆனது.
அப்போது, நெல் மூட்டை அதிகபட்சமாக ரூ.900க்கு விலை போனது.கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொட்டாஷ் உர மூட்டை ரூ.1,500; டி.ஏ.பி., ரூ.1,300; காம்ப்ளக்ஸ் ரூ.1,200; யூரியா (45 கிலோ) ரூ.280, கலைக்கொள்ளி ரூ.880க்கு விற்கப்படுகிறது.ஆனால், நெல் மூட்டை ரூ.1,100 என அரசு விலை நிர்ணயித்துள்ளது.அதாவது, உரம் உள்ளிட்ட இடு பொருட்களின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு உயர்ந்துள்ள நிலையில், நெல் விலை கடந்த 12 ஆண்டுகளில் 20 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.இந்த 20 சதவீத விலை உயர்வு, அறுவடை செய்வதில் 5 முதல் 10 சதவீத நெல்லிற்கு மட்டுமே கிடைக்கிறது.
90 முதல் 95 சதவீத நெல்லிற்கு குறைந்த பட்ச விலையாக ரூ. 850 முதல் 1,000 வரை விலைதான் கிடைக்கிறது.உதாரணத்திற்கு, தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நேற்று கோ-51 ரக நெல் 3,225 மூட்டை, ஏ.டீ.டி.-37 ரக நெல் 1,200 மூட்டை விற்பனைக்கு வந்தது. இதில், கோ-51 ரக நெல் அதிகபட்ச விலை ரூ.1,031க்கும், குறைந்தபட்ச விலை ரூ.815க்கும், ஏ.டீ.டி-37 ரக நெல் அதிகபட்சமாக ரூ.1,003க்கு கொள்முதல் செய்யப்பட்டது
.இதே நிலைதான் வேர்க்கடலை, எள், உளுந்து உள்ளிட்ட பிற தானியங்களுக்கும் உள்ளது.உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் மற்றும் ஆட்களின் கூலி நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் விளை பொருட்களுக்கு மட்டும் அரசு நிர்ணயித்த விலை கூட கிடைக்காதது விவசாயிகளை விரக்தி அடையச் செய்துள்ளது.இதே நிலை தொடர்ந்தால், மாநிலத்தில் விவசாயம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.