காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான `நேஷனல் ஹெரால்டு’ நாளிதழின் பங்குகள் விற்பனை தொடர்பான பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியிருந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பு, “ஆளும்கட்சி இது போன்ற போலியான ஜோடிக்கப்பட்ட வழக்குகளைப் பதிவு செய்வதன் மூலம் கோழைத்தனமான சதியில் வெற்றி பெறமுடியாது. அதை மோடி அரசு அறிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற தந்திரங்களுக்கு நாங்கள் பயப்படவும் மாட்டோம், தலைவணங்கவும் மாட்டோம். நாங்கள் சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கடுமையாகப் போராடுவோம்” எனத் தெரிவித்தது.

காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கெளரவ் பாட்டியா செய்தியாளர்களிடம், “ `ஊழல்’ செய்தால் மக்களுக்குப் பயந்து சட்டத்தின் முன் தலைவணங்கத்தான் வேண்டும். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க நிராகரிக்கிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும். மேலும், சோனியா காந்தி, ராகுல் இருவரும் (நேஷனல் ஹெரால்டு வழக்கு) ஊழல் வழக்கில் தற்போது ஜாமீனில்தான் இருக்கின்றனர் என்பதைக் காங்கிரஸ் நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும், சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதோராவும் நில பேரம் தொடர்பான ஊழல் வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே அதிக ஊழல் குடும்பம் என ஒன்று இருந்தால், அது சோனியா காந்தி குடும்பம்தான். மக்கள் சோனியா காந்தி குடும்பத்தை நம்பிக்கையுடன் பார்த்தார்கள். ஆனால், அவர்கள் நாட்டைக் கொள்ளையடிக்க முயன்றனர். அதனால்தான் எந்த நீதிமன்றமும் அவர்களுக்கு எதிரான எந்த வழக்கையும் ரத்து செய்யவில்லை. 2015-ல் இந்த வழக்கில் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்ற சோனியா காந்தியின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்ற முடிவில் தலையிட மறுத்துவிட்டது” எனக் கூறினார்.