சென்னை: “நோய்களோடு போராடி வாழ்க்கையை நகர்த்த வேண்டிய காலம் இது” என்று மருத்துவப் படிப்பு நிறைவு விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.
சென்னை மருத்துவ கல்லூரியின் 186 வது இளங்கலை மருத்துவ படிப்பு நிறைவு விழா இன்று (ஜூன் 2) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “இந்தியாவிலேயே அதிக மருத்துவர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. மருத்துவப் பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று மருத்துவ சேவை புரிய வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கரோனா தொற்று. தொடர்ந்து உருமாற்றம் அடைந்து பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது குரங்கு அம்மை என்ற பெயரில் நோய் பாதிப்புகள் வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டு வருகிறது. புதிதாக மருத்துவர்களாக பொறுப்பேற்ற உங்களுக்கு மிகப்பெரிய சவால் வருங்காலத்தில் ஏற்பட உள்ளது. நோய்களோடு போராடி வாழ்க்கையை நகர்த்த வேண்டிய காலம் இது. மக்களைக் காப்பாற்ற கூடிய தகுதியான மருத்துவர்களாக நீங்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறீர்கள். மருத்துவம் படித்த நீங்கள் மக்களுக்கான சேவையை வழங்க வேண்டும்.
அண்மையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் உண்மையில் பாராட்டத்தக்கது. 65 கோடி ரூபாய் செலவில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நரம்பியல் துறை கட்டிடம் கட்டப்பட உள்ளது” என்றார்.