காந்திநகர்: “பிரதமர் நரேந்திர மோடி இந்த ஒட்டுமொத்த உலகின் பெருமித அடையாளம்” என பாஜகவில் இணைந்த ஹர்திக் படேல் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். ஹர்திக் படேலை வரவேற்று குஜராத் பாஜக அலுவலகத்தில் பிரம்மாண்ட பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
பாஜகவில் இணைந்த ஹர்திக் படேல் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் பாஜகவில் இணைந்துள்ளேன். கட்சியில் ஒரு தொண்டனாகப் பணியாற்றப் போகிறேன். எனக்கென்று எந்தப் பதவியையும் நான் கட்சி மேலிடத்தில் கேட்கவில்லை. பணி செய்வதற்காகவே பாஜகவில் இணைந்துள்ளேன். காங்கிரஸில் யாரும் எந்த வேலையும் செய்வதில்லை. ஆகையால், காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பாஜகவுக்கு வர வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுமொத்த உலகின் பெருமித அடையாளம். தேசத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களோடு மக்கள் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். நானும் அதையே செய்யும் பொருட்டு பாஜகவில் இணைந்துள்ளேன்” என்றார்.
விரைவில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவுக்கு இன்னும் பல பெரிய தலைகளை ஈர்க்கும் பணியில் ஹர்திக் படேல் ஈடுபடுவார் என கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களை ஈர்ப்பது இலக்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பாஜகவில் இணைவதை முன்னிட்டு இன்று காலை அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டில் ஹர்திக் படேல் சிறப்புப் பூஜைகள் மேற்கொண்டார்.
முன்னதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நான் ஒரு புதிய அத்தியாத்தை தொடங்கவுள்ளேன். தேசிய, சமூக, பிராந்திய நலனுக்கான எண்ணங்களுடன் இந்த அத்தியாயம் தொடங்குகிறது. தேசத்துக்கான மாபெரும் சேவையில் நான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒரு சிறிய வீரனாக இருப்பேன்” என்று பதிவிட்டிருந்தார்.
ஹர்திக் கடந்து வந்த பாதை: குஜராத்தில் பட்டிதார் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி பிரபலமானவர் ஹர்திக் படேல் (28). இவர், காங்கிரஸில் சேர்ந்து பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
குஜராத் மாநில செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும், சமீபகாலமாக கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த ஹர்திக் படேல், தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். 3 ஆண்டு காலத்தை காங்கிரஸில் இருந்து வீணடித்துவிட்டதாகவும் விமர்சனம் செய்தார். குஜராத் காங்கிரஸ் தலைவர்களுக்கு மக்கள், தேர்தல் என எதைப்பற்றியும் கவலை இல்லை, டெல்லி தலைவர்கள் குஜராத் வந்தால் அவர்களுக்கு சிக்கன் சாண்ட்விச் உறுதி செய்வதில் மட்டுமே அக்கறை என்று கூறினார்.
இதையடுத்து கடந்த 18-ம் தேதி (மே 18) காங்கிரஸில் இருந்து விலகினார். பாஜக தலைமையை புகழ்ந்து கருத்து தெரிவித்தார். அதனால், அவர் பாஜகவில் சேரலாம் என்று செய்திகள் வெளியானது. ஒருபுறம் அவர் ஆம் ஆத்மியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஜூன் 2) அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.