
பிரம்மாஸ்திரா படத்தை ராஜமவுலிக்கு காட்டாதது ஏன்? இயக்குனர் பதில்
அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட்டில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ரிலீஸுக்கு இன்னும் நாட்கள் இருந்தாலும் இப்போதிருந்தே படத்தின் புரோமோஷன் வேலைகளை துவக்கி விட்டனர். இந்த படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் ஜோடியுடன் அமிதாப்பச்சன், நாகர்ஜூனா என பிரபல நட்சத்திரங்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்குனர் ராஜமவுலியும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராஜமவுலி, படத்தின் இயக்குனரிடம் என்னுடைய தந்தை விஜயேந்திர பிரசாத்துக்கு இந்த படத்தை திரையிட்டு காட்டிய நீங்கள் எனக்கு ஏன் காட்டவில்லை என ஜாலியாக ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த இயக்குனர் அயன் முகர்ஜியின் பதிலும் வேடிக்கையாக இருந்தது.
அதாவது ராஜமவுலி படங்களின் வெற்றிக்கு பின்னணியில் அவரது தந்தை முக்கிய தூணாக இருப்பதால் ராஜமவுலியிடம் இருந்து அவரை எப்படியாவது திருடிவிட வேண்டும் என தாங்கள் முயற்சித்ததாக கூறினார் அயன் முகர்ஜி. அதனால் தான் இந்த படத்தை முடித்ததுமே விஜயேந்திர பிரசாத்தை அழைத்து படத்தை போட்டு காட்டினார்களாம். படத்தின் நிறை குறைகள் பற்றி அவரது கருத்துக்களை கேட்டுகொண்டபின் அவர் கூறிய ஆலோசனையின்படி சில காட்சிகளை மீண்டும் படமாக்கியதாகவும் கூறிய அயன் முகர்ஜி, இயக்குனர் ராஜமவுலிக்கு என தனியாக சிறப்புக்காட்சி ஒன்றை திரையிட்டு காட்ட இருப்பதாகவும் கூறியுள்ளார்.