பிரித்தானியாவில் குரங்கம்மை தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாக UKHSA அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் மே மாதத்தில் இருந்தே குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது.
இதுவரை 190 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 183 பேர் இங்கிலாந்திலும், நான்கு பேர் ஸ்கொட்லாந்திலும், இருவர் வடக்கு அயர்லாந்திலும், ஒருவர் வேல்ஸிலும் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரித்தானியாவின் UKHSA அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், மொத்தமுள்ள குரங்கம்மை தொற்றாளர்களில் 86% ஒரே நகரத்தில் வசிப்பவர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
லண்டன் நகரில் இதுவரை 132 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என UKHSA அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இரண்டாவதாக தென் கிழக்கில் 10 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 111 பேர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்கள், இருபாலின ஈர்ப்பாளர்கள் என தெரிய வந்துள்ளது.
ஆனால், உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கையில்,
தன்பாலின ஈர்ப்பாளர்கள் மட்டுமே தங்களுக்கு குரங்கம்மை அறிகுறிகள் தென்பட்டதும் முறையாக மருத்துவர்களை நாடியுள்ளதாகவும், அதனாலையே எண்ணிக்கையில் அவர்கள் அதிகமாக காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தொற்று பரவுதலுக்கு முக்கிய காரணியாக தன்பாலின ஈர்ப்பாளர்களின் விடுதிகள், நீராவி குளியல் இடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குரங்கம்மை தொற்று எவருக்கு வேண்டுமானாலும் உறுதி செய்யப்படலாம் என குறிப்பிட்டுள்ள மருத்துவ நிபுணர்கள், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 111 இலக்கத்திற்கு தொடர்புகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் குரங்கம்மை நோய் பரவல் தொடர்ந்தே காணப்படுகிறது. ஆண்டுக்கு 9,000 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக குரங்கம்மை பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.