அகமதாபாத், : குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடாவை சேர்ந்தவர் ஷாமா பிந்து (24 ). சமூகவியல் பாடத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளார். குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்தான். ஆனால், நாட்டையே வியப்பில் ஆழ்த்தக் கூடிய அதிரடி முடிவை எடுத்துள்ளார். அது, ‘நானே ராஜா; நானே மந்திரி’ என்பதுபோல், ‘நானே மணமகன்; நானே மணமகள்’ என்ற பாணியில் திருமணம் செய்ய உள்ளார். ஆம். மணமகனே இல்லாமல் தனக்கு தானே வரும் 11ம் தேதி திருமணம் இவர் செய்து கொள்ள உள்ளார். தனது திருமணத்துக்கு தேவையான புத்தாடைகள், நகைகளை வாங்கி குவித்துள்ளார். உறவினர்களையும் அழைத்துள்ளார், பாரம்பரிய சம்பிரதாயங்களுடன் மேளம், தாளம், மந்திரங்கள் முழுங்க திருமணம் நடத்தப்பட உள்ளது. இவருக்கு இவரே தாலி கட்டிக் கொள்ள இருக்கிறார். தனது திருமணம் பற்றி ஷாமா பிந்து கூறுகையில், ‘‘திருமணம் என்ற பாரம்பரியம் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதை சிறு வயதிலேயே முடிவு செய்து விட்டேன். அதே நேரம், சராசரி இந்திய பெண்கள் விரும்புவது போல், நானும் ஒரு மணமகளாக வேண்டும் என விரும்பினேன். அதனால், என்னை நானே மணந்து கொள்ள முடிவு செய்தேன். முதல் பெண்ணாக நான் தான் இப்படி செய்ய உள்ளேன். எனது பெற்றோரும் எனது திருமணத்தை ஏற்றுக் கொண்டார்கள். திருமணம் 11ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. அதன் பிறகு, தேனிலவுக்காக 2 வாரம் கோவா செல்கிறேன்,’’ என்றார்.