சென்னை ஆழ்வார் திருநகரில் கடந்த 33 வருடங்களாக அனைத்து மதத்தினரும் சேர்ந்து ஆட்டோ ஓட்டி வருகிறார்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இணைந்து அந்த பகுதியில் விநாயகர் கோவில் கட்ட முடிவு செய்து சிறியதாக கட்டி வழிபட்டு வந்தனர். அதற்கு மங்கள விநாயகர் என்று பெயர் சூட்டினர்.
பின்பு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைவரும் சேர்ந்து ஜாதி, மதம் பாராது முழு ஒத்துழைப்புடன் கோவிலை விரிவாக கட்டி சிறப்பு பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் செய்ததுடன் பக்தர்கள் வசதிக்காக அனைத்து விழாக்களையும் கொண்டாடி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி நாட்களில் தினமும் பல்வேறு பூஜைகள், அன்னதானம் என செய்து அங்கு அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி வழிபடுவர்.
30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து நேற்று மங்கள விநாயகருக்கு பிரமாண்ட முறையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் மத வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்றது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.