ஆத்தூர்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒரு மைனர் பெண்ணுக்குத் திருமணம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருகிறது.
நேற்று சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி செல்லியம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வெங்கடேசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் அங்குள்ள கோயிலில் திருமணம் நடந்தது. இந்த திருமணம் அதிமுக ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார், கூட்டுறவுச் சங்க தலைவர் கோபி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. திருமணத்தை ஆத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெய்சங்கர் திருமணத்தை நடத்தி வைத்தார்.
திடீரென மணப்பெண்ணுக்கு 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் செய்து வைத்ததாகத் தகவல் வெளியாகி இதுபற்றிய வீடியோ வைரலானது. இதையொட்டி ஆத்தூர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் உரிய பதிலளிக்கவில்லை.
அங்கு மணமக்கள் மற்றும் அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் யாரும் இல்லை. எனவே அதிகாரிகள் அங்கிருந்து திரும்பினர். நேற்று மதியம் சேலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் மீண்டும் அப்பகுதிக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் வருவதை அறிந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் ஓட்டம் பிடித்ததால் மணமக்களுக்கு உரிய வயது சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற முடியவில்லை. அதிகாரிகள் ”இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும். இது மைனர் திருமணமாக இருந்தால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.