மோடி பேச்சை புறக்கணித்து செய்துவிட்டு முதல்வர் பற்றி பேசிய கதிர் ஆனந்த்

வேலூர்:
பிரதமர் மோடி காணொளிக் காட்சி வாயிலாக பேசிக் கொண்டிருந்தபோது, அதனை புறக்கணித்து விட்டு வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி, நேற்று இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி வாயிலாக நாடு முழுவதும் உள்ளவர்கள் பங்கேற்றனர்.

வேலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி பேசும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து மாநிலங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பிரதமர் மோடி பேசும் விழா முடிந்ததும் மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக இருந்தது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலுார் மக்களவை தொகுதி தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த், மாவட்ட சேர்மன் பாபு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பயனாளிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கிடையே திமுக எம்.பி கதிர் ஆனந்த், “பிரதமர் இமாச்சல பிரதேசத்தில் இருந்து பேசிக்கொண்டு இருக்கிறார். நாம் அதனை அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் பேசும் இந்தி நமக்குப் புரியாது. அதனால், நான் என்ன சொல்கிறேன்.. அதனை ம்யூட் செய்துவிடலாம்.” என்று தெரிவித்து விட்டு, தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலினின் வேலூர் வருகை குறித்தும் விளக்கிப் பேசினார்.

மேலும், அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும்படி வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் கேட்க, அதற்கு மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் என பலரும் விளக்கிக் கொண்டிருந்தனர். மேலும், கூட்டத்தில் பங்கேற்ற பயனாளிகள் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்துக் கொண்டிருந்தனர். கூட்டம் முடியும் வரை பிரதமர் மோடியின் பேச்சு ம்யூட் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அரசு நிகழ்ச்சியில் பிரதமரின் பேச்சை புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.