‘யூடியூபர்கள் கருத்து கூறினால் சிறை வைக்கக்கூடாது, மாறாக…’ – நாம் தமிழர் சீமான் கருத்து

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்று பேசிவரும் அண்ணாமலை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியைப்போல எல்லா தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட தயாரா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர், திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்- 6, நீதிபதி சுபாஷிணி முன்பு ஆஜராயினர். இதேபோல் இவ்வழக்கில், மதிமுக மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு உள்ளிட்ட மதிமுகவினரும் ஆஜரானார்கள்.
அதைத்தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியபோது, “மதிமுகவிற்கும், எங்களுக்கும் எந்த பகையும் இல்லை. அண்ணன் வைகோவிற்கும், எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. என்னை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்படியாவது காங்கிரஸ் வெளியே வந்து போராட்டம் நடத்துகிறது என்பதில் மகிழ்ச்சி. கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக கூறும் நீங்கள் (திமுக), உங்கள் தொலைக்காட்சியில் என்னை அரைமணி நேரம் பேசவிடுவீர்களா?
image
சென்னையில், 20 நாட்களில், 18 கொலைகள் நடந்துள்ளன. அப்படியானால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்பதை நாம் எப்படி ஏற்க முடியும்? வாதம், பிரதிவாதம் செய்து தான் எதையும் உருவாக்க முடியும். யூடியூபர்கள் மாரிதாஸ், சவுக்கு சங்கர், கோபிநாத் என பலர் தங்களது கருத்துகளை கூறினால், அதற்கு எதிர் கருத்துகளை தான் முன்வைக்க வேண்டும். அவர்களை தூக்கி உள்ளே (சிறையில்) வைக்கக்கூடாது.
பேரறிவாளன் விடுதலையை நாங்கள் எந்த வகையிலும் கொண்டாடவில்லை. அப்படி கொண்டாட வேண்டுமென்றால் நான் தான் முக்கியமாக கொண்டாட வேண்டும். பேரறிவாளன் நிரபராதி இல்லை என்று கூறும் அண்ணாமலை, மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தெரியாமல் குஜராத்தில் கலவரம் நடைபெற்றதா? அந்த வழக்குகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டதை என்ன என்று கூற வேண்டும்.
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாம் என்ற சித்திரவதை கூடத்தை உருவாக்கியவர் கருணாநிதி. இதனை மூட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். கடந்த 31 ஆண்டுகளில், இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் செய்த பெருங்குற்றம் என்ன? செய்தார்கள் என ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா?.
image
எனவே, சிறப்பு அகதிகள் முகாமையும், இலங்கை தமிழர்கள் கொடுமைக்கு காரணமான ‘க்யூ’ பிரிவையும் உடனடியாக கலைக்க வேண்டும். இதை செய்யாமல், ஈழத்தமிழர்களுக்கு அதைச் செய்கிறோம்; இதை செய்கிறோம் என்று கூறுவது உங்களுக்கு (திமுகவிற்கு) நாடகமாக தெரியவில்லையா?
பிரதமர் பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒருமுறையாவது என்னை போன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்காரா? ரபேல் ஊழல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கோப்புகளை கேட்டபோது, ‘காணாமல் போய்விட்டது’ என்று கூறிய பாதுகாப்புத் துறை, எப்படி நாட்டை பாதுகாக்கும்?.
8 ஆண்டுகளில் பா.ஜ.க சாதித்தது என்ன? என்று அண்ணாமலையை ஏதாவது ஒன்றைக் கூற சொல்லுங்கள் பார்க்கலாம். நீட், க்யூட், எக்சியூட் என்று எத்தனை தேர்வுகளை மாணவர்களுக்கு கொண்டு வருகிறார்கள். ஏன் நாட்டை ஆளும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு தேர்வு வைக்கக் கூடாது? மோடி, அமித்ஷா உள்ளிட்ட அனைவருமே தேர்வெழுத வேண்டும்.
image
ஒவ்வொரு துறைகளிலும் தேர்வு வைத்து, அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும்தான் அரசியல் தலைவர்களாக உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பாஜக என்று அண்ணாமலை கூறியுள்ளாரே?” அது குறித்து தங்களது கருத்து என்ன என்ற கேள்விக்கு, “பாஜக பெரிய கட்சி என்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களைப் போன்று பாஜக தனித்து போட்டியிட தயாரா?
என் மரத்திற்கு கீழே நிழலில் முளைத்து இருக்கும் குட்டை செடி பாஜக. ‘வளர்கிறோம்’ என்று நீங்கள் கூறினால், முதலில் தனித்துப் போட்டி இடுங்கள். பின்னர் தான் அண்ணாமலை எதையும் கூற வேண்டும். முடிந்தால், தேசியக் கட்சியான காங்கிரசும் தனித்து போட்டியிடட்டும். திமுக- அதிமுக தனித்து போட்டி போடட்டும். அப்போது தெரியும் யார் கட்சி பெரியது” இவ்வாறு அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.