2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பொருட்கள் வரிச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ்,நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக நேற்று முதல் (01) பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வியாபாரப் பொருட்களின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யோகட் இறக்குமதி மீது கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 1000 ரூபா விசேட வரி 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகையான சீஸ்களுக்கும் கிலோகிராம் ஒன்றுக்கு விதிக்கப்பட்டிருந்த 400 ரூபா விசேட வரி 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தோடம் பழத்திற்கான இறக்குமதிக்கு கிலோகிராம் ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து 600 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திராட்சை மற்றும் ஆப்பிள்களுக்கான விசேட வரி ரூ.300ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, HS குறியீட்டு இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் இன்றி 369 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து இறக்குமதி பொருட்களுக்குமான வரியை 15 சதவீதத்தில் இருந்து 200 சதவீதமாக அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வரி அதிகரிப்பு 06 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மீதான வரி 50 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள், ரைஸ் குக்கர், மைக்ரோவேவ், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் தொலைபேசிகள் மீதான வரி 100% அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மின்சாதனங்களுக்கான வரி 15% அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாக்லேட் மீதான வரி 200 சதவீதமும், LED பல்புகள் மற்றும் அலங்கார பொருட்கள் மீதான வரி 50 சதவீதமும் அதிகரித்துள்ளது.