ஸ்ரீநகர்: காஷ்மீரில், ராஜஸ்தானை சேர்ந்த வங்கி மேலாளரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களில், ஹிந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட 2வது சம்பவம் இதுவாகும்.
குல்காம் மாவட்டத்தில் உள்ள எலகுவாகி டெகாட்டி வங்கியில் மேலாளராக இருந்த விஜய்குமாரை பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டான். அதில், படுகாயமடைந்த விஜய்குமார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார். ராஜஸ்தானின் ஹனுமன்கார்க் மாவட்டத்தை சேர்ந்த விஜய்குமார், சமீபத்தில் தான் அங்கு பணி நியமனம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், அந்த பகுதியை சுற்றி வளைத்த பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
குல்கம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்த ரஜ்னி பாலா என்ற காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த ஆசிரியை சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விஜய்குமார் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement