“தமிழ்நாடு பா.ஜ.க மக்களுக்காக குரல் எழுப்பவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அ.தி.மு.க-வினர் வெளிப்படுத்த வேண்டும்!” என அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியது அரசியல் அரங்கில் பேசு பொருளாக மாறியது.
இந்த நிலையில், இது தொடர்பாக, பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடத்தில் ,“அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொன்னையனுக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் அவர் பா.ஜ.க-வை இப்படி பேசியிருக்கிறார். அவர் தேவையில்லாமல் கருத்துகளை தெரிவித்திருக்கிறார். கூட்டணி தர்மம் என்றுகூட பார்க்காமல், பொன்னையன் பா.ஜ.க குறித்து பேசியதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசியதற்கு அமைப்புச் செயலாளர் பொன்னையனிடம் அ.தி.மு.க உரிய விளக்கம் கேட்க வேண்டும்.
காவேரி, முல்லை, மேகதாது பிரச்னையில் தமிழர்களுக்காக ஏதும் செய்யவில்லை எனக் கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தி மொழியைத் திணிக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு கிடையாது. தமிழ்நாடு பா.ஜ.க இந்தி மொழியை கடுமையாக எதிர்க்கும் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். 1 முதல் 6-ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் தமிழ் வழி கல்வியில் பயில எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. தேசிய கல்விக் கொள்கையில் எங்களுக்கு இரட்டை கருத்து கிடையாது.
தமிழ்நாட்டில் உள்ள நான்கு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களும், மின்சாரத்துறை, கல்வித்துறையில் நடக்கும் ஊழல் குறித்து சட்டமன்றத்தில் பேசி வருகிறோம். அண்ணாமலையும் இது குறித்து மக்கள் மன்றத்தில் பேசி வருகிறார். ஆனால், அ.தி.மு.க அமைச்சர்கள் ஊழல் குறித்து சட்டமன்றத்தில் பேசியது உண்டா?அ.தி.மு.க உறுப்பினர்களைவிட பா.ஜ.க உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். நாங்கள் யாருடைய தயவு தாட்சண்யத்திலும் வளர வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. எங்களுடைய நடத்தையால், செய்கையால் நாங்கள் வளர்கிறோம். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியாக இல்லை என்பதுதான் எங்கள் கருத்து.
திராவிட மாடலுக்கு இதுவரை நான் தேடிய எந்த அகராதியிலும் விளக்கம் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் ஏற்கெனவே சாதிவாரி கணக்கெடுப்பு இருக்கிறது, தற்போது அவரவர் தேவைக்காக அரசியல் லாபத்துக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். சாதியில்லா சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதுதான் பா.ஜ.க-வின் சித்தாந்தம்” என்றார்.