லக்னோ: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அதன்பின் கோயில் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இரண்டாவது கட்டமாக கோயிலின் கருவறை அமைக்கும் பணிக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அடிக்கல் நாட்டினார்.
வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா, துறவிகள், மடாதிபதிகள், ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘ராமர் கோயில் மக்களின் நம்பிக்கைக்கான அடையாளமாக விளங்கும். இக்கோயில் நாட்டின் தேசிய கோயிலாக இருக்கும். கோயில் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு இருந்த சங்கடம் முடிவுக்கு வருகிறது. விரைவில் இங்கு ராமர் கோயில் அமையும்’’ என்று கூறினார்.
துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறும்போது, ‘‘ராமர் கோயில் முதல் கட்ட பணிகள் முடிந்துவிட்டன. கருவறைக்கு அடிக்கல் நாட்டிய நிலையில், இரண்டாவது கட்ட பணிகள் தொடங்கும். 2023 டிசம்பருக்குள் கோயில் கட்டும் பணிகள் நிறைவடைந்து ராமர் சிலை கருவறைக்குள் நிறுவப்படும். பின்னர், தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றார்.