லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாளை வெளியாகவிருக்கிறது. இது பழைய ‘விக்ரம்’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும், லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான ‘கைதி’க்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் என்றும் இணையத்தில் பல்வேறு செய்திகள் உலாவுகின்றன.
இப்படியான நிலையில், 1986-ல் வெளியான `விக்ரம்’ படத்திற்கு விகடனின் மார்க் என்ன தெரியுமா? 15.6.86 தேதியிட்ட இதழில் வெளியான விகடனின் `விக்ரம்’ விமர்சனம் இதோ…
‘விக்ரம்’ விமர்சனம்
ஏக பந்தோபஸ்துகளுடன் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு எடுத்துச் செல்லப்படும் ‘அக்னி புத்ரா’ ஏவுகணையை, வடையைக் கவ்விச் செல்லும் காக்கா மாதிரியாக ஒரு ஹெலிகாப்டர் கொத்திச் சென்று விட, அதை மீட்க வேண்டிய பொறுப்பு ‘விக்ரம்’ கமலுக்கு!
ஏவுகணையும், அதைத் தனதாக்கிக் கொண்டுவிட்ட சத்யராஜும் கற்பனை நாடான சலாமியாவில். கம்ப்யூட்டர் குட்டி (நன்றி: சுஜாதா!) ப்ரீதியுடன் (இந்த நடிகை எங்கேயிருந்தார் இத்தனை நாளாய்? படு சுறுசுறுப்பு!) பாஷை தெரியாத அந்தப் பாலைவனப் பிரதேசத்துக்குக் கமல் பயணித்து, அற்புத சாகசங்கள் பல புரிந்து, ஏவுகணையை வங்காள விரிகுடாவுக்குத் திசை திருப்பி விடுவது பின்பகுதிக் கதை!
கண் மூடிக் கண் திறப்பதற்குள் இடைவேளை! முன்பகுதியைச் சின்னதாக்கியிருப்பது விறுவிறுப்புக்கு முதல் காரணம்! நமக்கு மிகவும் பரிச்சயமான மயிலாப்பூர் வீதிகளில் கதை நடப்பது இரண்டாவது காரணம்!
பிறக்கப் போகும் குழந்தைக்காக மூணு சக்கர சைக்கிளை வாங்கிக்கொண்டு மனைவி அம்பிகாவோடு மார்க்கெட் தெருக்களில் கமல் ஜாலியாக நடந்து வர, சத்யராஜின் அடியாள் குறிதவறிக் கமலுக்குப் பதில் அம்பிகாவைச் சுட்டுக் கொன்றுவிட, கோபமும் ஆவேசமும் பீறிட்டு கோதாவில் இறங்குவது… அரசு உத்தியோகத்தில் இருந்து கொண்டு சத்யராஜுக்கு ஏவுகணை பற்றிய ரகசியம் சப்ளை செய்யும் ராகவேந்தரைச் சித்திரவதை செய்து உண்மையறிய முயல்வது…
உச்சகட்டக் காட்சிகளை அட்வான்ஸ் செய்துவிட்ட மாதிரி, கமல் சம்பந்தப்பட்ட இந்தக் காட்சிகளில் பலே பரபரப்பு! ‘வாத்யங்களோட நீங்க முதல்லே போங்க… நான் முகூர்த்தத்துக்கு வரேன்’ மாதிரியான சுஜாதா தனமான வசனங்களின் பக்கவாத்தியம் வேறு!
படப்பிடிப்புக் குழு சலாமியாவுக்குள் போய் இறங்கியதும் படம் பார்ப்பவர்களுக்கு கட்டப்பட்ட கண்களுடன் காட்டில் நிற்கும் நிலை!
பெரும்பாலான வசனங்கள் சலாமிய (?!) மொழியில்! (உடனுக்குடன் ஜனகராஜ் வேறு அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதே வேற்று மொழிப் படத்தைப் பார்க்கிறோமோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது!)
அம்ஜத்கான், டிம்பிள் கபாடியா என்று பம்பாய் இறக்குமதிகள்!
ஒரு பக்கம் கம்ப்யூட்டர், மானிட்டர் என்று விஞ்ஞான முன்னேற்றங்கள்! மறுபக்கம் ஒட்டகம், குதிரை, கத்தி என்று பழைய அடாசுகள்!
ஆக, படத்தோடு, ‘இன்வால்வ்’ ஆக இயலாமல் பின்பகுதி அநியாயத்துக்கு அந்நியமாகி விடுகிறது!
‘வழக்கமான மசாலாவை விட்டு விலகிய வித்தியாசமான ட்ரீட்மெண்ட்தான்’ என்றாலும் ஒரு ஏவுகணைக்காகக் கதாநாயகன் இந்த அளவுக்கு மெனக்கெட வேண்டுமா என்ற கேள்வியும் பெரிதாய்த் தெரிகிறது! காரணம், ராக்கெட்டின் நல்லது கெட்டதுகளையும், கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை சமாசாரங்களையும் முழுவதுமாக உணராத தமிழ்ப் பட ரசிகனால் இந்த ’21-ம் நூற்றாண்டு மசாலா’வுடன் ஒன்றிப் போக முடியவில்லை!
`விக்ரம்’ படத்திற்கு விகடன் அளித்த மதிப்பெண் 42/100.