அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் படத்திற்கு ‘ஜவான்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் அறிமுகமான அட்லீ, அதன்பிறகு நடிகர் விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய 3 படங்களை தொடர்ந்து இயக்கி வெற்றி தந்ததையடுத்து தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குரானார். இதனைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுடன் அட்லீ கூட்டணி சேர்ந்தார். படத்தின் முதல்கட்ட பணிகள் நடைபெற்று வந்தநிலையில், கொரோனா காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. பின்னர் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்கள் நடைபெற்றநிலையில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் போதைப்பொருள் வழக்கால், மீண்டும் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டு வந்தது.
இதனால் இந்தப் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டநிலையில், இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் அட்லீ. ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
யோகி பாபு ஏற்கனவே, ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அட்லீ, ஷாருக்கான் படத்தின் தலைப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘ஜவான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்பு ‘லயன்’ என்று பெயரிடப்பட்டதாக கூறப்பட்டநிலையில், தற்போது ‘ஜவான்’ என்று வைக்கப்பட்டுள்ளது. 25-க்கும் மேற்பட்ட டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டநிலையில், கடைசியாக இந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் டைட்டிலுடன் 1.34 நிமிடங்கள் ஓடக்கூடிய டீசரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.