பேர்பேக்ஸ்:தன் முன்னாள் மனைவியும், ‘ஹாலிவுட்’ நடிகையுமான ஆம்பர் ஹேர்டுக்கு எதிரான அவதுாறு வழக்கில் நடிகர் ஜானி டெப்புக்கு சாதகமாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
‘ஹாலிவுட்’ திரைப்பட நடிகர் ஜானி டெப், 58, பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தில் ஜாக் ஸ்பாரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலக புகழ் பெற்றார். இவர், நடிகை ஆம்பர் ஹேர்ட், 36, என்பவரை காதலித்து 2015ல் திருமணம் செய்தார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2017ல் விவாகரத்து பெற்றனர்.
அமெரிக்காவின், ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில், நடிகை ஆம்பர் ஹேர்ட் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில், அவர் குடும்ப வன்முறைக்கு ஆளானதாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, ஆம்பர் ஹேர்டிடம் 385 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் ஜானி டெப் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
ஆம்பர் குறித்து ஜானியின் வழக்கறிஞர் கூறிய கருத்து தன் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, நடிகை ஆம்பர் ஹேர்ட், 770 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஜானி மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.இரண்டு வழக்கு விசாரணைகளும் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆறு வாரங்கள் நடந்தன.
இதில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், ஜானி டெப்புக்கு சாதகமாக தீர்ப்பளித்த நீதிபதிகள், அவருக்கு 115 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நடிகை ஆம்பருக்கு உத்தரவிட்டனர்.ஆம்பர் தொடுத்த அவதுாறு வழக்கில், அவருக்கு 15 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நடிகர் ஜானி டெப்புக்கு உத்தரவிடப்பட்டது.
Advertisement