தமிழ் திரை உலகில் சுமார் அரை நூற்றாண்டு காலமாக முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. 46 ஆண்டுகளில் 1,000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்திருக்கும் இசைஞானி, இன்று தமது 80 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமது கோடிக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்து மழையிலும் இளையராஜா நனைந்து வருகிறார்.
திரையுலகினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரின் வாழ்த்துகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல், பிரதமர் நரேந்திர மோடி இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிிவித்துள்ளார்.
இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேசமயம் வழக்கமாக தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிப்பதை பழக்கமாக கொண்டுள்ள பிரதமர், இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு எதையும் வெளியிடவில்லை.
பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை.” என்று அண்மையில் இளையராஜா குறிப்பிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இளையராஜாவும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.