sourav ganguly அது சாதாரண ட்வீட்ங்க: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சவுரவ் கங்குலி!

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருக்கிறார். இந்த வாரியத்தின் செயலாளராக, பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா உள்ளார்.

இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில், “கிரிக்கெட் உலகிற்கு நான் வந்து இதோடு 30 வருடம் ஆகிறது. 30 வருடங்களில் எனக்கு ஆதரவு அளிக்க மக்களுக்கு நன்றி. மக்களுக்கு உதவுவதற்காக நான் இன்று ஒரு விஷயத்தை துவங்க போகிறேன். நான் துவங்கும் விஷயம் பலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் புதிய அத்தியாயத்திற்கு உங்களின் ஆதரவு தேவை.” என்று நேற்று பதிவிட்டார்.

இதையடுத்து, சவுரவ் கங்குலி அரசியலில் இறங்கப் போகிறார் எனவும், பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் தகவல்கள் பரவின. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கொல்கத்தாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இரவு விருந்து வைத்த நிலையில், கங்குலியின் ட்வீட் அரசியல் அரங்கில் சூட்டை கிளப்பியது. அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும், அவருக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன.

ஆனால், பிசிசிஐ தலைவர் பதவியை கங்குலி ராஜினாமா செய்யவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்தார். அதன் தொடர்ச்சியாக, உலக அளவிலான கல்வி சார்ந்த செயலியை தொடங்கியுள்ளதாக சவுரவ் கங்குலி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “உலகம் முழுவதும் புதிய கல்விச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளேன். இது உலகளவில் தொடங்கப்பட்ட ஒரு கல்விச் செயலி. நேற்று பதிவிட்ட ட்வீட் சாதாரணமானது. அதன்பேரில் கிளம்பிய ஊகங்களை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். ராஜினாமா எதுவும் செய்யவில்லை.” என்று சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.