அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சந்தேகநபர், இதற்கு முன்னரும் அப்பகுதியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் இரகசியமாக பிரவேசித்த சந்தேக நபர், அவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் தெரிவிக்கையில்,
“நான் முன்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தேன். சம்பவ தினத்தன்று நான் எனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன். இரகசியமாக பிரவேசித்த குறித்த சந்தேக நபர் என் வாயை இருக்கமாக அடைத்தான். அதனுடன் நான் கண் விழித்தேன். என்னை கயிற்றால் கட்ட முயன்றான். நான் கூச்சலிடத் தொடங்கினேன். பின்னர் அவன் ஓடிவிட்டான்.”
இது தொடர்பாக தான் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் தெரிவித்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் பொலிசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ஆயிஷாவுக்கு இப்படியான ஒரு நிலைமை நேர்ந்திருக்காது என்றும் அந்த பெண் மேலும் தெரிவித்துள்ளார்.