அட்லீ இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அட்லீ. அதன்பின்னர், நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா, ஜெய் ஆகியோர் நடிப்பில் உருவான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு இளைஞர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைக்க, இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய 3 வெற்றி படங்களை தந்ததையடுத்து, இயக்குநர் அட்லீ, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரானார்.
இதனைத் டர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுடன் அட்லீ கூட்டணி சேர்ந்து புதியப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். படத்தின் முதல்கட்ட பணிகள் நடைபெற்று, படப்பிடிப்பு துவங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால் தாமதமாகிக் கொண்டு வந்தது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இயக்குநர் அட்லீ மற்றும் நயன்தாரா ஆகிய இருவருக்குமே பாலிவுட்டில் இது அறிமுகப்படம் என்பதால் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மேலும் இந்தப் படத்தில் பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஷாருக்கன் மற்றும் அவரது மனைவி கௌரி கானின் ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு 25 டைட்டில்கள் ஆலோசனை செய்து, பின்னர் ‘ஜவான்’ என்று பெயரிடப்பட்டதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
மேலும், டைட்டில் டீசருக்கான தணிக்கை சான்றிதழ், ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் விண்ணப்பம் செய்த புகைப்படங்களும் பகிரப்பட்டு வந்தன. இந்த டைட்டில் டீசருக்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது. இந்நிலையில், ஷாருக்கான் முகத்தை பாதி மூடியநிலையில் ரத்தக் காயங்களுடன் பழமையான இடத்தில் ஆக்ஷனுக்கு தயாராவது போன்ற டைட்டில் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் ரெடி என்று கூறுகிறார். மேலும் இந்தப் படம் அடுத்தவருடம் ஜூன் 2-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.