பாஜக மாநிலத் தலைவரையோ, பாரதிய ஜனதா கட்சியைப் பற்றியோ பேசுவதற்கு பொன்னையனுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றும் அதிமுகவினர் ரெய்டுக்கு பயந்துகொண்டு சட்டசபையில் பேசவில்லை என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.வி.துரைசாமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
அண்மையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கும், அதிமுகவுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் நல்லதல்ல என்று கூறினார்.
மேலும், “தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. மாநில விவகாரங்களில் பாஜக இரட்டை நிலைபாட்டை எடுக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டாம். கர்நாடகாவுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என அம்மாநில பாஜக கூறுகிறது. ஆனால், தமிழ்நாடு பாஜக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறக்க வேண்டும்” என்கிறது என்று பாஜகவை பொன்னையன் விமர்சனம் செய்தார்.
கூட்டணி கட்சியான பாஜகவின் மீதான அதிமுக தலைவர் பொன்னையனின் இந்த விமர்சனம் பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பொன்னையனின் கருத்துக்கு பதிலளித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “யார் வேண்டுமானாலும் கருத்து சொல்ல உரிமை உண்டு. எல்லா தலைவர்களுக்கும் தங்களுடைய கட்சி தமிழகத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது தவறில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு, ஹிந்தி உள்ளிட்ட விஷயங்களில், தமிழர்களுக்கு எது நல்லதோ, அதனையே பா.ஜ.க செய்து வருகிறது. எந்த தமிழக மக்களுக்கு விரோதமாக பா.ஜ.க செயல்பட்டதில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு விவகாரங்களில் தி.மு.க.,வும், காங்கிரஸூம் தான் இரட்டை நிலைப்பாடு எடுத்து வருகின்றன” என்று கூறினார்.
இந்த நிலையில், அதிமுக மூத்த தலைவர் பொன்னையனின் விமர்சனம் குறித்து, பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, “பாஜக மாநிலத் தலைவரையோ, பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி பேசுவதையோ பற்றி பேசுவதற்கு பொன்னையனுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை” என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.பி. துரைசாமி, “65 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நீங்கள் சட்டசபையில் என்ன செய்கிறீர்கள். ஊழலைப் பற்றி பேசியதற்கு உதாரணம் சொல்ல முடியுமா? ரெய்டுக்கு பயந்துகொண்டு நீங்கள் பேசவில்லை. ஆக, எங்கள் தலைவரையோ எங்கள் கட்சியையோ குறை சொல்வதற்கு பொன்னையனுக்கு தார்மீக உரிமை கிடையாது. அவர் ஒரு மூத்த தலைவர், அவர்கள் கட்சிக்கு அறிவுரை கூறலாம்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“