அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்திலிருந்து 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.
கொவிட் தடுப்புக்காக நன்கொடையாளர்களிடமிருந்து இந்த நிதி பெற்றுக்கொள்ளப்பட்டது. கொவிட் தொற்று தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
மருத்துவமனைகளுக்குத் தேவையான 234 வகையான மருந்துகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. உலக சந்தையில் மருந்துகளின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, உள்நாட்டு மருந்துத் தொழிற்துறையை துரிதமாக அதிகரிப்பதற்கும் தேவையான மூலப்பொருட்களை இந்தியக் கடன் உதவியின் கீழ் பெற்றுக்கொள்வதற்குமான சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டு மருந்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை…
சுகாதாரத் துறையில் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (03) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
ஓயாமடுவ மற்றும் ஹொரணை, மில்லேவ பிரதேசங்களை மையமாகக் கொண்டு மருந்து உற்பத்திகளை மேற்கொள்வதற்கு 12 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். அடுத்த சில மாதங்களில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த வலயங்களில் 200க்கும் மேற்பட்ட மருந்து வகைகளை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமுர்த்தி மற்றும் கல்வி அமைச்சு இணைந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் போஷாக்கான உணவை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் இறக்குமதிக்கு பல்வேறு வகையில் நிதி உதவிகள் கிடைத்து வருகின்றன. உத்தேச வரவுசெலவு திட்டதில் இருந்தும் தேவையான நிதியை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய முன்னேற்றத்தின் அடிப்படையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் சுகாதாரத் துறையின் பணிகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, சுகாதாரச் செயலாளர் எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்த, மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க மற்றும் அமைச்சின் துறைசார் நிறுவனங்களின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
03.06.2022