மும்பை: ஊழல் வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும், விடுதி மற்றும் மதுபான பார் உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் வசூலித்ததாகவும் மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை சிபிஐ கடந்தாண்டு நவம்பர் 2-ம் தேதி கைது செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் அனில் தேஷ்முக்கை கடந்தாண்டு கைதுசெய்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தற்போது சிபிஐ நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்நிலையில் அனில் தேஷ்முக்குக்கு எதிராக சிபிஐ நேற்று 59 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் அப்ரூவராக மாறி, சாட்சியாளராக உள்ளார்.