வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை–அனுமதி பெறாமல் செயல்படும் குவாரிகளை ஆய்வு செய்ய, புவியியல்மற்றும் சுரங்கத் துறைக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.’கோவை மாவட்டம்,அரசம்பாளையம் பகுதியில், அனுமதியின்றி செயல்படும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’என, கோவையை சேர்ந்த காளிமுத்து என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அறிக்கை
இந்த வழக்கை விசாரித்த, பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல், கோவை மாவட்டம், அரசம்பாளையம் பகுதியில், எம்- – சாண்ட், கருங்கல் ஜல்லி தயாரிக்கும் குவாரி செயல்பட்டு வருவதாக, சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கோவை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர், மே 23-ம் தேதி, குவாரியை ஆய்வு செய்து, 2012-ல் 10 அடி வரையிலும், 2019-ல் மேலும் நான்கு அடியும் தோண்டப்பட்டதை கவனித்துள்ளனர்.குவாரியின் சட்ட விரோத செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது, புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் பொறுப்பு. ஆனால், புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில், அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை; குவாரியில் ஆய்வு செய்ததாகவும் தெரியவில்லை.
விசாரணை
மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறாததால், பதில் மனு தாக்கல் செய்யும் வரை, குவாரியில் வேறு எந்த பணியும் மேற்கொள்ளாமல் தடுக்க வேண்டும். அனுமதி பெறாமல் செயல்படும் குவாரிகளில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, ஜூலை 26-ல் நடைபெறும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Advertisement