சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள், முதல்முறையாக அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழர்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவர்; தான் கால் பதித்த கலை, எழுத்து, அரசியல் மற்றும் ஆட்சிப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தனித்தன்மையுடன் முத்திரை பதித்தவர்; 80 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கும், போராட்ட வாழ்க்கைக்கும் சொந்தமானவர். உலக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் திமுக என்ற இயக்கத்துக்கு அரை நூற்றாண்டு காலம் அசைக்க முடியாத தலைவராகத் திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
தமிழக முதல்வராக 5 முறை ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை, எளிய மக்கள் கல்வி, அறிவியல், சமூக பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற பல சமூக நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்தி, நாட்டின் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக, சமூக நீதி காத்து சமத்துவபுரங்களை அமைத்தவர். தமிழுக்கு செம்மொழி தகுதியைப் பெற்றுத் தந்தவர்; திருவள்ளுவருக்கு குமரி முனையில் சிலை அமைத்து பெருமை சேர்த்தவர்.
நாட்டின் விடுதலைக்கு தன் இன்னுயிரை ஈந்த தமிழகத்தின் தியாகத் தலைவர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழறிஞர்களுக்கு மணிமண்டபங்கள் அமைத்து, பிறந்த நாட்களை அரசு விழாவாகக் கொண்டாட வழிவகுத்தவர். வாழ்நாளின் இறுதிவரை ஓய்வறியாமல் அயராது உழைத்த கருணாநிதி ஆற்றியுள்ள அரும்பணிகள், சாதனைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அவருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவரது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் அவரது உருவச்சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார்.
அதன்படி, கடந்த மே 28-ம் தேதி, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவால் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. அதேபோல், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினமான இன்று முதல்முறையாக அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு, இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
முன்னதாக, காலை 7.45 மணிக்கு அண்ணா அறிவாலயம் செல்லும் முதல்வர், அங்கு கருணாநிதியின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து நுங்கம்பாக்கம் முரசொலி அலுவலகம் செல்கிறார். அதன்பின் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, காலை உணவை அங்கேயே அருந்துகிறார். இதைத்தொடர்ந்து ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.