நியூயார்க் : ‘பாகிஸ்தான் சொந்த மக்களின் அழித்தொழிப்புக்கு உதாரணமாக விளங்குகிறது’ என, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா காட்டமாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், பாக்., காஷ்மீர் பிரச்னையை எழுப்பியதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இதில் ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக குழுவின் சட்ட ஆலோசகர் டாக்டர் காஜல் பட் பேசியதாவது:தற்போது வங்கதேசமாக உள்ள கிழக்கு பாகிஸ்தானில், சொந்த மக்கள் என்றும் பாராமல், 50 ஆண்டுகளுக்கு முன்னால் அழித்தொழிப்பு வேலை செய்த அவமான சரித்திரத்தின் உதாரணமாக பாகிஸ்தான் உள்ளது.
ஆயிரக்கணக்கான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.இந்த கொடிய செயலுக்கு பாக்., பொறுப்பு ஏற்கவில்லை; வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. பாக்.,கில் சிறுபான்மை ஹிந்துக்களும், சீக்கியர்களும் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். இதை பாக்., தடுக்க வேண்டும்.
இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் எதிரான பயங்கரவாத ஊக்குவிப்பை பாக்., நிறுத்த வேண்டும். ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் இன்றும் என்றும் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாக நீடிக்கும். இதில் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் அடங்கும். இதை எந்த நாடும் மறுக்க முடியாது. பாக்., ஜம்மு – காஷ்மீர் குறித்து ஐ.நா.,வில் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்வது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement