இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தெலுங்கானா திகழ்கிறது: சந்திரசேகர் ராவ்

ஐதராபாத் :

8 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 2-ந்தேதி தெலுங்கானா மாநிலம் உருவானது. இதை அந்த மாநில அரசு கொண்டாடி வருகிறது. தெலுங்கானா மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பப்ளிக் கார்டன் பகுதியில் அந்த மாநில முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், தேசியக் கொடியை ஏற்றி மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

குறுகிய காலத்தில் தெலுங்கானா மாநிலம், மிக விரைவான, நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளது. கூடுதல் பாசனம், குடிநீர் கிடைப்பதோடு, மக்கள் நலன், தகவல் தொடர்பு மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அனைத்து துறைகளுமே வளர்ச்சி அடைந்துள்ளன. தெலுங்கானா தற்போது இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது.

நிதி விவகாரங்களில் மிக சரியான திட்டமிடல் மூலம் மாநில அரசினால் வருவாய் ஆதாரங்களை உயர்த்த முடிந்தது. 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை, ஆண்டு பொருளாதார வளர்ச்சி என்பது 17.24 சதவீதமாக இருந்தது. இது தெலுங்கானா மாநிலத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக உயர்த்தியது.

கொரோனா பெருந்தொற்று போன்ற பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் கூட மாநில வளர்ச்சியில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. 2014-15-ம் ஆண்டில் தெலுங்கானா உருவானபோது மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.5 லட்சத்து 5 ஆயிரத்து 849 கோடியாக இருந்தது. 2021-22-ம் ஆண்டில் இது ரூ.11 லட்சத்து 54 ஆயிரத்து 860 கோடியாக உயர்ந்துள்ளது.

அதுபோல 2014-15-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 104 ஆக இருந்த தனிநபர் வருமானம், 2021-22-ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து துறைகளுக்கும் 24 மணிநேரமும் தடையற்ற தரமான மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் தெலுங்கானாவாகும். மாநிலம் தொடங்கப்பட்ட போது தெலுங்கானாவில் இருந்த 7,778 மெகாவாட் என்ற நிறுவு திறன் தற்போது 17 ஆயிரத்து 305 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. அதுபோல சூரிய மின்சக்தியையும் 74 மெகாவாட்டில் இருந்து கடந்த 8 ஆண்டுகளில் 4,478 மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. இது இந்த மாநிலத்தின் சாதனையாகும்.

பகிரதா திட்டத்தை இயக்கமாக அரசு செயல்படுத்தியதை தொடர்ந்து அனைத்து வீடுகளுக்கும் இன்று பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கடனை குறைப்பதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மக்களிடையே முன்பிருந்த பாகுபாட்டை நீக்கும் வகையில் தலித் மக்களின் மேம்பாட்டை நோக்கிய சமூக சீர்திருத்தத் திட்டமான தலித் பந்து திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு அதிகாரங்களை அளிப்பதோடு தன்னிறைவை பெறச் செய்து பொருளாதாரத்தில் அவர்களை வலுப்படுத்தினால், அவர்களை பாகுபாட்டில் இருந்து விடுதலை செய்ய முடியும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது. ஐதராபாத் நகரின் 4 திசைகளிலும் 4 தெலுங்கானா மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (டைம்ஸ்) பல்நோக்கு நவீன சிறப்பு ஆஸ்பத்திரிகள் அமைக்கப்பட்டு ஐதராபாத் மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் செய்து தரப்படும்.

கடந்த 8 ஆண்டுகளில் 1.33 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தெலுங்கானா உருவான பிறகு ஐதராபாத் நகரத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2.32 லட்சம் கோடி முதலீட்டில் தொழில்கள் தொடங்கப்பட்டு 16.49 லட்சம் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.