Bcci Tamil News: இந்தியாவில் 15 வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து கிரிக்கெட் அணிகளும் தங்களது வருட காலண்டரை கடைபிடிக்க புறப்பட்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி நெதர்லாந்து அணியுடன் டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து மண்ணில் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, ஜூன் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை தென் ஆப்பிரிக்கா உடனான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகிறது. இதற்காக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து அணியு டனான பழைய கணக்கை தீர்க்க நீண்ட தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காத்திருப்பு முடிவு கட்ட காத்திருக்கும் இந்தியா…
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது ஒரு கனவாக இருந்து வருகிறது. இங்கு ஒரு டெஸ்ட் தொடரை கைப்பற்றி 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இந்த காத்திருப்பை இந்திய அணி கடந்த ஆண்டே முடிவுக்கு கொண்டு வந்திருக்கும். ஆனால், அப்போது இருந்த கொரோனா தொற்று பரவல் அச்சம் இந்தியாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது.
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை முன்னாள் கேப்டன் விராட் கோலி வழிநடத்தினார். அவரது தலைமையிலான இந்திய அணி ட்ரெண்ட் பிரிட்ஜ் நாட்டிங்ஹாமில் நடந்த ஆட்டத்தை ட்ரா செய்தது. 2வது டெஸ்ட்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிறகு லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டு வந்தது. கொரோனாவால் கடைசி டெஸ்ட் போட்டி தடைபட்ட நிலையில், தொடரில் இந்தியா 2-1 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது. எனவே மீதமுள்ள அந்த ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி நடைபெறுகிறது. அதனுடன் சேர்ந்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களும் நடைபெறுகிறது.
இத்தொடருக்கான இந்திய அணி ஜூன் 16ம் தேதி இங்கிலாந்து செல்கிறது. அங்கு ஜூன் 24 முதல் 27 வரை பயிற்சி ஆட்டதில் விளையாடிகிறது. பின்னர் ஜூலை 1 முதல் ஜூலை 17 வரை தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.
வருடத்திற்கு 2 ஐ.பி.எல்; பி.சி.சி.ஐ-யின் புதிய திட்டம்…
இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியுடன் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட முக்கிய பி.சி.சி.ஐ அதிகாரிகளும் பயணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்கு முக்கிய காரணம் ஐபிஎல் தொடர் தான் என்றும், 2023ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் நீளத்தை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்காக அனைத்து கிரிக்கெட் வாரியங்களுடனும் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
முதலில் பி.சி.சி.ஐ அதிகாரிகள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் முக்கிய ஆலோசனையை நடத்தவுள்ளனர். இங்கிலாந்து வாரியம் இந்தியாவின் முடிவுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், அவர்கள் ஒப்புதல் கொடுத்துவிட்டால், மற்ற வாரியங்களும் ஆதரவுக் கொடுக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஆண்டுக்கு 2 ஐபிஎல் நடத்த வேண்டும் என முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வரும் இந்த சூழலில் பிசிசிஐ-யின் ஆலோசனை கூட்டம் கிரிக்கெட் வட்டராத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil