நியூயார்க்: “அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்” அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் ஆவேசமாகப் பேசினார்.
அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞர், போலீஸாரால் கொல்லப்பட்டார். பள்ளிச் சிறுவர்களை பாதுகாக்கப் போராடிய இரண்டு ஆசிரியர்களும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடந்த ராப் தொடக்கப் பள்ளியில் அமெரிக்க அதிபர் பைடன் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி நிகழ்வில், “அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக எதாவது செய்யுங்கள்” என்று கூடியிருந்த மக்கள் கோஷம் எழுப்பினர்.
இது தொடர்பாக அதிபர் ஜோ பைடன் பேசும்போது, “இன்னும் எத்தனை படுகொலைகளை நாங்கள் ஏற்க போகிறோம்? இன்னும் எத்தனை மக்களை நாம் இழக்கப் போகிறோம். துப்பாக்கி வன்முறைக்கு எதிரான கடுமையான சட்டங்களை ஆதரிக்க மறுப்பது (குடியரசுக் கட்சி செனட்டர்கள்) மனசாட்சியற்றது.
சட்டமியற்றுபவர்கள் ஆயுதங்களை வாங்கக் கூடிய வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் கொலைக் களங்களாக மாற்றியுள்ள வன்முறையைக் கட்டுப்படுத்த உதவும். இது, குற்ற நடவடிக்கையை சற்று குறைக்கும் என்று நம்புகிறேன்.
கடந்த 20 வருடங்களில் போலீஸார், ராணுவ அதிகாரிகளைவிட பள்ளிக் குழந்தைகள்தான் துப்பாக்கியால் அதிகம் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
கைத்துப்பாக்கி வாங்குபவர்கள் எத்தகைய பின்னணியை கொண்டவர்கள் என்பதை கவனிக்க வேண்டும். அதிகத் திறன் கொண்ட தோட்டாக்களை தடை செய்ய வேண்டும். துப்பாக்கி விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளினால் ஏற்படும் குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பான சட்ட மாற்றம் வரவேண்டும்” என்று ஆவேசமாக பேசினார்.
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, கனடாவில் கைத்துப்பாக்கிக்கள் வைத்திருப்பதற்கு எதிராக மசோதா ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.