"இன்னும் எத்தனை படுகொலைகள் ?" – கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க ஜோ பைடன் வலியுறுத்தல்

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 25-ஆம் தேதி டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞர் பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கைத்துப்பாக்கியை தடை செய்ய பொதுமக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இருந்து அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என சட்டம் இயற்றும் வல்லுநர்களை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “இன்னும் எத்தனை படுகொலைகளை நாம் ஏற்கத் தயாராக இருக்கிறோம்?” அமெரிக்க மக்களை நாங்கள் மீண்டும் தோல்வியடையச் செய்ய முடியாது. பெரும்பான்மையான குடியரசுக் கட்சியின் செனட்டர்கள் கைதுப்பாக்கியான கடுமையான சட்டங்களை ஆதரிக்க மறுத்தது மனசாட்சியற்றது.

குறைந்தபட்சம், சட்டம் இயற்றுபவர்கள் தாக்குதல் ஆயுதங்களை வாங்கக்கூடிய வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் . இது பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் கொலைக் களங்களாக மாற்றியுள்ள வன்முறையைக் கட்டுப்படுத்த உதவும்.

கைத்துப்பாக்கி வாங்குபவர்களின் பின்புல சோதனைகளை வலுப்படுத்த வேண்டும். அதிக திறன் கொண்ட தோட்டாக்களை தடை செய்ய வேண்டும். துப்பாக்கிகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதை கட்டாயமாக்குதல் மற்றும் துப்பாக்கி உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் செய்யப்படும் குற்றங்களுக்கு பொறுப்பேற்க அனுமதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என பைடன் தெரிவித்தார்.

கனடாவில் கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.