உக்ரைன் மீதான படையெடுப்பின் நடுவே திருடப்பட்ட கோதுமையை ரஷ்யா தமது நட்பு நாடான சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெய்ரூட்டில் உள்ள உக்ரைன் தூதரகம் இது தொடர்பில் தெரிவிக்கையில், சுமார் 100,000 டன் திருட்டு கோதுமையை சிரியாவுக்கு ரஷ்யா அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது உண்மையில் குற்றச்செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மே மாத இறுதியில் சிரியாவின் முதன்மை துறைமுகமான லதாகியாவில் ரஷ்ய சரக்கு கப்பல் காணப்பட்டதாகவும், திரட்டப்பட்ட தகவலில், குறித்த கப்பலானது கிரிமியா பகுதியில் இருந்து கோதுமையை நிரப்பியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மே 19ம் திகதி கிளம்பிய அந்த கப்பலானது சிரியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கோதுமையானது உக்ரைனில் சேமிக்கப்பட்டிருந்தவை எனவும், ரஷ்ய துருப்புகள் ஆக்கிரமித்திருந்த பகுதிகளில் இருந்தே கோதுமை திருடப்பட்டுள்ளது எனவும் லெபனானில் உள்ள உக்ரைனின் தூதரகம் விளக்கமளித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு டன் கோதுமைக்கு 400 டொலர்கள் என கூறப்படும் நிலையில், சுமார் 40 மில்லியன் டொலர் மதிப்பிலான கோதுமையை ரஷ்யா திருடி சிரியாவுக்கு விற்றுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, 2021 ல் இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் சிரியாவுக்கு ஒரு மில்லியன் டன் கோதுமை வழங்க ரஷ்யா உறுதியளித்திருந்தது.
இதனிடையே, 500,000 டன் கோதுமை ஏற்கனவே நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷ்யாவால் திருடப்பட்டதாக உக்ரைனின் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் உக்ரைனின் குற்றச்சாட்டுகளை ஏப்ரல் மாதத்தில் இருந்தே மறுத்து வந்துள்ளது.
இதனிடையே, ரஷ்யாவால் திருடப்பட்ட கோதுமைக்கு பல்வேறு நாடுகள் போட்டிபோட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.