உதயநிதி ஸ்டாலின் அவ்வளவு கூறியும் மீண்டும் விருப்பம் தெரிவித்த திமுக எம்.எல்.ஏ

“கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினரும், இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பங்கேற்க வேண்டும்” என்றும், மக்களின் விருப்பத்தை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் எனவும் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் விருப்பம் தெரிவித்துள்ள சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பச்சேரியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மதியரசன் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் முருகன் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது ஆண்டு பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தமிழரசி ரவிக்குமார், கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, திமுக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
image
அப்போது பேசிய தமிழரசி ரவிக்குமார், அடுத்த ஆண்டு கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டடும்போது, சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினரும், இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்ற அனைவரது எண்ணத்தை முதல்வர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
image
இதையடுத்து தமக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வலியுறுத்தி, தி.மு.க. தலைமைக்கு யாரும் தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டாம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் இவ்வாறு விருப்பம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.