கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் “தமிழ் வாழ்க” போர்டு அலுவலகத்திற்கு வெளியே ஒதுகுப்புறமாக வீசப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் கிராம ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், தங்களின் ஊராட்சிகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் வாயிலாகத்தான் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு சார் ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் என வந்து செல்கின்றனர். ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முகப்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் திருத்தி அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஏற்கனவே அங்கு வைக்கப்பட்டிருந்த “தமிழ் வாழ்க” பெயர் பலகை சிதலமடைந்த நிலையில், அதனை அலுவலக வளாகத்தில் ஒதுக்குப்புறத்தில் குப்பைகள் நிறைந்த பகுதியில் கிடக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் போட்டுள்ளனர்.
தமிழக அரசும், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் மக்களவையில் ”தமிழ் வாழ்க” என கோஷமிடுகின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்களில் தமிழ் பெயர் பலகையை சீரமைக்கக் கூட முன்வருவதில்லை. மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலகங்களில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை வைப்பதில் கட்சிகள் காட்டும் ஆர்வமும், அக்கறையும், தமிழ் மொழியில் இல்லையே என தமிழ் ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகத்திலும் ”தமிழ் வாழ்க” பெயர் பலகை, சரி செய்யாமல் ஓரம்கட்டி வைத்திருப்பது அவர்கள் மேலும் கவலை அடையச்செய்துள்ளது. ”தமிழ் வாழ்க” பெயர் பலகையை சரி செய்து வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, கண்ட இடத்தில் போட்டு கேவலபடுத்தாமல் இருந்தால் போதும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.