புதுடெல்லி: பாஜக ஆளும் உ.பி.யில் எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி தற்போது ரூ.3 கோடியாக உள்ளது. இதை ரூ.5 கோடியாக உயர்த்தும்படி எதிர்க்கட்சி எம்எல்ஏக்களில் பகுஜன் சமாஜின் உமா சங்கர் சிங், காங்கிரஸின் ஆராதனா மிஸ்ரா உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் யோகி தனது பட்ஜெட் விவாதத்துக்கான பதிலில் தெரிவித்தார்.
இதுகுறித்து கடந்த சட்டப்பேரவை கூட்ட இறுதிநாளில் முதல்வர் யோகி பேசுகையில், “உ.பி.யின் மக்கள்தொகை சுமார் 25 கோடியாக உள்ளது. இங்குள்ள 75 மாவட்டங்களும் ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி சரிசமமாக முன்னேற வேண்டும். அனைவருக்கும் அனைத்து வளர்ச்சி என்பதே எங்கள் அரசின் நோக்கம்” என்று தெரிவித்தார்.
உ.பி.யின் 423 எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, முதல்வர் யோகியின் ஆட்சியில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2019-ல் இந்த நிதி ரூ.1.5 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டது. இது 2020-ல் ரூ.3 கோடியாக உயர்ந்தது. தற்போது மூன்றாவது முறையாக ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
உ.பி.யில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியின் முதல்வராக இருக்கும் யோகியின் இந்த அறிவிப்பை முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவும் பாராட்டி வரவேற்றுள்ளார். அனைத்து எம்எல்ஏக்களும் விரும்பியதை முதல்வர் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இதுபோல் உ.பி.யிலும் எம்எல்ஏக்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதியை பாஜக அரசு நிறுத்தி வைத்தது. முதல்வர் யோகியின் அறிவிப்பை அடுத்து உ.பி.யின் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரான சுரேஷ் கண்ணா, சட்டப்பேரவை நான்காம் நிலை அலுவலர்களுக்கான கவுர ஊதியத்தை ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.13 ஆயிரமாக உயர்த்துவதாக அறிவித்தார்.
தமிழகத்தில் எம்எல்ஏக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி தற்போது ரூ.3 கோடியாக உள்ளது. இதை ரூ.5 கோடியாக உயர்த்தும்படி திமுக ஆட்சியில் பல்வேறு எம்எல்ஏக்கள் கோரியுள்ளனர். இத்துடன் அரசு சார்பில் ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் நான்கு சக்கர வாகனம் அளிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.