உத்தரப் பிரதேசத்தில் மருத்துவமனை அலட்சியத்தால் பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தை எறும்புக் கடித்து இறந்ததாகக் கூறி குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர ரைக்வார். இவர் மே 30 அன்று தனது கர்ப்பிணி மனைவி சீமாவுடன் மஹோபா மாவட்டத்தில் உள்ள மகளிர் மாவட்ட மருத்துவமனைக்குச் சென்றார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. புதிதாகப் பிறந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து, மருத்துவர்கள் குழந்தையை பிறந்த குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் அனுமதித்தனர்.
வார்டில் அழுக்கு மற்றும் எறும்புகள் இருப்பதாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் புகார் அளித்தனர். ஆனால் அந்த புகார் மீது மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தை எறும்புக் கடித்து இறந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே குழந்தையின் மரணத்திற்கு காரணம் என அவர்கள் தெரிவித்தனர். மேலும் மருத்துவர் ஒருவர் ரூ.6,500 லஞ்சம் வாங்கியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். தகவல் கிடைத்ததும் கோட்வாலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இது குறித்து விசாரணை நடத்த தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM