மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், “இந்திய மொழிகள் அனைத்தும், தேசிய மொழிகள்தான்” எனக் கூறியிருக்கிறார்.
குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடைபெற்ற இரண்டு நாள் கல்வியமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய கல்விக்கொள்கை குறித்தும், இந்தியப் பிராந்திய மொழிகள் குறித்தும் தன் கருத்தை வெளிப்படுத்தினார். பிற மாநில கல்வியமைச்சர்கள் முன்னிலையில் பேசிய தர்மேந்திர பிரதான், “நாம் அனைவருமே அரசியல் படைப்பாளிகள். நமது கல்வி முறையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவதில், நிச்சயம் ஒருமித்த கருத்தை நம்மால் உருவாக்க முடியும். இதுதொடர்பாக, எனது துறை அதிகாரிகள் விரைவில் உங்கள் அனைவரையும் இணைத்து பாடத்திட்டம் குறித்து விவாதிப்பார்கள். அதுமட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் வெற்றிகரமான கல்வித் திட்டங்களால் முழு நாடும் பயனடையலாம்.
இந்திய மொழிகள் அனைத்தும், தேசிய மொழிகள்தான். எந்தவொரு பிராந்திய மொழியும், ஆங்கிலத்தை விடவோ அல்லது இந்தியை விடவோ தாழ்ந்ததல்ல. பிராந்திய மொழிகளில் கல்வி கற்பதற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்போம்” எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து புதிய கல்விக்கொள்கை குறித்துப் பேசியபோது, “இதில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதை, முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த கருத்து வேறுபாடுகள் சில நல்ல காரணங்களுக்காக என்பதை உறுதியாக நான் நம்புகிறேன். அதுகுறித்த ஆலோசனைகள் கல்வி மேம்பாட்டுக்காக இருந்தால், நாங்கள் அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வோம்” என்றார்.
இந்த கல்வியமைச்சர்கள் மாநாட்டில், தமிழ்நாடு கல்வியமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.