கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராக இருக்கும் மங்காபிள்ளை என்பவர், விருத்தாசலம் காவல் நிலையத்தில் இன்று புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அந்த புகாரில், ”நான் இந்திய குடியரசு கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறேன். கடந்த 30.05 2022 அன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால சாதனைகள் குறித்து பெருமையாக பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களை இழிவுபடுத்தும் வகையில், நம்பிக்கையற்ற நிலையிலிருந்து நம்பிக்கையும், இருளிலிருந்து ஒளியையும், பறையரிலிருந்து விஸ்வகுரு (From Paraiah to Vishwakarma) என்று பதிவிட்டிருக்கிறார். மேற்படி பொருளின் பதம் தீண்டத்தகாத பறையனைவிட, விஸ்வகர்மா உயர்ந்த சாதி அளவிற்கு பாஜக வளர்ந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பாஜக ஆட்சியின் 8 ஆண்டுகாலம் மோடி ஆட்சியை புகழ்வதற்காக ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களையும் இழிவுபடுத்தியுள்ளதால் எனக்கும் என் சமுதாயத்திற்கும் மன உளைச்சலும், எங்கள் மீது வெறுப்புணர்வு ஏற்படும் வகையிலும் அமைந்துள்ளது. எனவே மேற்படி அண்ணாமலை மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் 3 (1) (U) பிரிவில் வழக்கு பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.