பல ஆண்டுகளாக நம் சமூகத்தில் நிலவும் மிகப் பெரிய அவலம் எதுவென்றால் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதுதான். இந்தக் கழிவுகளை அகற்றும்போது விஷ வாயு தாக்கி உயிரிழப்பவர்களின் விகிதமும் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு உதாரணமாக சென்னையடுத்த திருமுல்லைவாயில், மதுரை என சமீபத்தில்கூட 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த அவலம் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வளவுக்கும் இந்தக் கொடுமையைத் தடுக்கும் வகையில் 1994-ம் ஆண்டே ‘தேசிய தூய்மை பணியாளர் ஆணையம்’ தொடங்கப்பட்டது. ஆனால் எதுவும் மாறவில்லை. இந்திய அளவில் மனித கழிவுகளை மனிதனே அகற்றுபவர்களின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் முதல் இடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டோர் தங்களது உயிரை இழந்துள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக 2019-ம் ஆண்டில் இந்திய அளவில் 110 பேர் இறந்துள்ளனர். கழிவு நீர் தொட்டியில் இறங்கி அதனை சுத்தம் செய்யும்போது அந்தக் கழிவு நீர் தொட்டியில் இருக்கும் அம்மோனியா (ammonia), கார்பன் டை ஆக்ஸைடு (carbon dioxide), கார்பன் மோனோ ஆக்ஸைடு (carbon monooxide), சல்பர் டை ஆக்ஸைடு (sulphur di oxide) நைட்ரஜன் டை ஆக்ஸைடு (nitrogen di oxide) போன்ற விஷ வாயுக்களால் தாக்கி தங்களது உயிரை இழக்கின்றனர்.
இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில், இன்னும் மனிதர்கள்தான் கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்து வருகிறார்கள். சில நாடுகளில் இயந்திரங்களைக் கொண்டு கழிவு நீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகின்றன. ஆனால், அந்த தொழில்நுட்ப முறை அதிகம் அறியப்படாததாலும், பலரும் பயன்படுத்துவதில்லை. கழிவு நீர் தொட்டிகளை மனிதன் சுத்தப்படுத்தினாலும் சரி, இயந்திரங்கள் சுத்தப்படுத்தினாலும் சரி, சம்பந்தப்பட்ட குடியிருப்பு அல்லது வீட்டின் உரிமையாளர் தொடர்ந்து சுத்தம் செய்து வந்தால் தொட்டியில் விஷ வாயுக்கள் தங்காது. உயிரிழப்பைத் தடுக்க இதுவே முதல் படி. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யாத காரணத்தினாலே இது போன்ற உயிர் சேதங்கள் நடக்கின்றன என்று சொல்கிறார்கள் வல்லுநர்கள்.
கழிவு நீர் தொட்டிகளால் ஏற்படும் உயிர் சேதங்களை தடுப்பதற்கு எப்படிபட்ட முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வனிடம் பேசியபோது, “மனிதன் கழிவு நீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்வதை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. ஆனால், இந்த அவலம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்கள் கழிவு நீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்வதைத் தடுக்க மறுவாழ்வு மையத்தையும் அமைத்திருக்கிறது. ஆனால், பயன் ஒன்றும் இல்லை. இந்தியச் சமூகத்தில் குறிப்பிட்ட சில சாதியினரே கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் பணியில் ஈடுபடுகின்றனர். இதைப் புரிந்து கொள்ளாமல் இந்த விஷயத்தில் தீர்வு காண முடியாது.
நாம் சாலைகளில் செல்லும்போது ஒரு மனிதன் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்வதைக் கண்டு எந்த விதமான குற்ற உணர்ச்சியின்றி கடந்து செல்கிறோம். நம் வீட்டில் உணவு பொருட்களை தயாரிப்பதற்கு மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்கு நம்மிடம் சரியான ஆராய்ச்சிகள் இல்லை. கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயந்திரங்களிலும் அதைப் பயன்படுத்துவதில் பிரச்னைகள் இருக்கின்றன. சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியிருக்கும் புறநகர்களில் இருக்கும் கழிவு நீர் தொட்டியின் வடிவமைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தும் விதத்தில் இல்லை. இந்தத் தொட்டிகளுக்குள் ரோபோ போன்றவற்றை அனுப்பிக்கூட சுத்தம் செய்ய முடியாது. இங்கு அமைக்கப்பட்டிருக்கும் கழிவுநீர் தொட்டிகள் பெரும்பாலும் மனிதன் இறங்கி சுத்தம் செய்வது போன்றுதான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதைச் சரிசெய்ய வீடு கட்டும்போதே கழிவுநீர் தொட்டியையும் இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்வது போன்று அமைக்க முன்வர வேண்டும். நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களில் கழிவு நீர் தொட்டிகளிலிருந்து வெளியேறும் நீர் பூமிக்குள் சென்று அங்கிருந்து வெளியேறுவது போன்று அமைத்திருக்கிறார்கள். ஆனால், இதுபோன்று அமைக்க மிகப்பெரிய கழிவுநீர் வெளியேற்றும் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். எனவே கழிவு நீர் தொட்டிகளை தகுந்த பொறியியல் அமைப்பில் அமைக்காமல், அதை அகற்றுவதற்கு உரிய முறைகளை கையாளாமல் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது கடினம்” என்றார்.
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவனிடம் பேசியபோது, “கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்வோர் செலவு குறைவாக முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் ஆட்களை வைத்து செய்கிறார்கள். கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கென்றே முறையான ஏர் பிரஷ்ஷர் வண்டிகள் இருக்கின்றன. அதை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை கட்டாயம் கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்தால் விஷ வாயுக்கள் தங்காது.
கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் மூலம் செய்யலாம் என்றால், சேகரிக்கப்படும் கழிவு நீரை வெளியில் விட இடமில்லை. இதை காரணமாக வைத்து அதிக பணமும் வசூலிக்கிறார்கள் கழிவு நீர் அகற்றும் லாரி உரிமையாளர்கள். இந்தக் குளறுபடிகளாலே பலர் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். வெளிநாடுகளில் எவ்வளவு செலவு பிடித்தாலும் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய இயந்திரங்களைத்தான் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டிலும் சில நகராட்சிகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தி கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யப்படுகிறது. முதலில் இயந்திரங்களைப் பயன்படுத்திதான் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே வர வேண்டும்” என்றார்.
வேதியியல் முறைப்படி கழிவுநீர் தொட்டியிலுள்ள விஷ வாயுக்களை பிரித்தெடுக்கலாமா என்பது குறித்து வேதியியல் ஆசிரியை உஷா ராணியிடம் பேசியபோது, “கழிவு நீர் தொட்டிகளில் பெரும்பான்மையாக இருக்க கூடியது ஹைட்ரஜன் சல்பைடு (hydrogen sulphide) வாயுதான். இதையடுத்து மீத்தேன், அம்மோனியா, கார்பன் டை ஆக்ஸைடு போன்ற விஷ வாயுக்கள் இருக்கும்.
இந்த ஹைட்ரஜன் சல்பைடு வாயுவை சுவாசிக்கும்போது உடனே தலைவலி, வாந்தி, மூச்சுத் திணறல் ஏற்படும். தொழிற்சாலைகளில் எலக்ட்ரோ பிளேட்டிங் முறைப்படி வாயுக்களை பிரிப்பதுபோல், கழிவுநீர் தொட்டியிலிருக்கும் ஹைட்ரஜன் சல்பைடு வாயுவிலிருந்து ஹைட்ரஜனை பிரித்துவிட்டால் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கும் மனிதர்களின் உயிரிழப்பைத் தடுக்கலாம். இந்த ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகவும் பயன்படுத்தலாம்” என்றார்.
கழிவு நீர்தொட்டிகளை சுத்தப்படுத்துவதற்கு பல ஆலோசனைகளும், தொழில்நுட்பங்களும் நம்மிடையே ஏராளமாக உள்ளன. அவற்றைச் சரியான விதத்தில் பயன்படுத்தி நடைமுறைப்படுத்துவது அரசின் கைகளில்தான் உள்ளது. சென்னையையடுத்த திருமுல்லைவாயிலில் சமீபத்தில் 3 பேர் கழிவுநீர்தொட்டி சுத்தப்படுத்த இறங்கியபோது உயிரிழந்தனர்.
அந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க நாம் செல்ல எத்தனித்தபோது சம்பந்தப்பட்டவர்கள் நம்மை அங்கே அனுமதிக்கவில்லை. எனவே கழிவுநீர் தொட்டிகளை அடிக்கடி சுத்தப்படுத்துவதை சம்பந்தபட்ட வீட்டின் உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். கழிவுநீர் இணைப்புகளை முறைப்படுத்தி அவற்றை வெளியேற்றுவதற்கான பணிகளையும் அரசு முன்னெடுக்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.