திருப்பதி:
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் போகால அசோக்குமார் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே மலையில் பக்தர்களுக்கு 7400 வாடகை அறைகள் உள்ளன. அதில் 30 ஆயிரம் பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கீழ் திருப்பதியில் மேலும் 30 ஆயிரம் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் சிரமமின்றி திருப்பதியிலேயே தங்கிக்கொள்ளலாம். சாமி தரிசனம் செய்ய ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே திருப்பதியில் இருந்து புறப்பட்டு மலைக்கு செல்லலாம்.
பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு இன்னும் ஓரிரு நாட்களில் திருப்பதி விஷ்ணு நிவாசம் விடுதியில் அன்னதானம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் உள்ள அன்னமய்யா பவனில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் ஒரு மணி நேரம் தொலைபேசி மூலமாக பக்தர்களிடமிருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
இந்த மாதத்துக்கான குறைகேட்கும் நிகழ்ச்சி இன்று நடக்க இருந்தது. ஆனால் தேவஸ்தான நிர்வாக காரணங்களுக்காக குறைகேட்கும் நிகழ்ச்சி இன்று ரத்து செய்யப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 66,001 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 38,831 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.01 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.