டக்கா்,
இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளான காபோன், செனகல் மற்றும் மத்திய கிழக்கு நாடான கத்தாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
துணை ஜனாதிபதி காபோன் நாட்டில் தனது சுற்றுபயணத்தை முடித்துக் கொண்டு, செனகல் நாட்டின் டக்கர் நகரத்திற்கு சென்றாா். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. செனகல் நாட்டின் அதிபா் மேக்கி சாலுடன் அவா் சந்தித்தாா். விவசாயம், சுகாதாரம், பாதுகாப்பு, ரயில்வே, எரிசக்தி, கலாச்சாரம் போன்ற துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செனகலில் இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவா்களிடையே உரையாடினாா்.
இந்திய வம்சாவளியினரோடு அவா் பேசுகையில், “வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக நீங்கள் எங்கு சென்றாலும், இரண்டு விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். முதலாவதாக உங்களுக்கு வாய்ப்பளித்த நாட்டின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும், இரண்டாவதாக, உங்கள் வேர்களை மறந்துவிடாதீர்கள்” என்று துணை ஜனாதிபதி கூறினார்.
டக்கரில் உள்ள கறுப்பு நாகரிகங்களின் அருங்காட்சியகம் மற்றும் ஆப்பிரிக்க மறுமலர்ச்சி நினைவுச் சின்னத்தையும் அவா் பார்வையிட்டார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகிற ஜூன் 4- ந்தேதி வரை செனகல் நாட்டில் சுற்றுபயணம் மேற்கொள்கிறாா். தனது சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக வருகிற ஜூன் 4 முதல் ஜூன் 7 வரை கத்தார் நாட்டிற்கு செல்ல உள்ளாா்.