காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, டெல்லியில் நேற்று கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் பல்வேறு தலைவர்களையும், சமூக ஆர்வலர்களையும் சந்தித்துப் பேசினார். அவர்களில் சிலருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சோனியா காந்திக்கு லேசான காய்ச்சலும், கரோனா அறிகுறிகளும் தென்பட்டன. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணைக்கு வரும் 8-ம் தேதி சோனியா நேரில் ஆஜராக அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், சோனியா 8-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதில் மாற்றமில்லை என்று சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
நலம் பெற பிரதமர், முதல்வர் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கரோனா தொற்று பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.