ஜூன் 10 முதல் ஆவடியில் 3 நாட்கள் உணவுத் திருவிழா

சென்னை

சென்னை புறநகர் ஆவடியில் வரும் ஜூன் 10 முதல் 3 நாட்கள் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது.

நேற்று முன்தினம் ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், “ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து, பிரிக்கப்பட்டு உருவான திருவள்ளூர் மாவட்டத்தின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்புத் துறை சார்பில், வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை, ஆவடி கனரக வாகன தொழிற்சாலை மைதானத்தில் மாபெரும் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.

இந்த திருவிழா, தமிழகம் மற்றும் இந்திய உணவு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைக்கும் வகையிலும், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்குப் பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு வகைகளை வழங்கும் நோக்கிலும் நடைபெற உள்ளது.  இதில் உள்ளூர் உணவகங்கள் முதல், நாடு மற்றும் உலக உணவகங்கள் வரை, சுமார் 150 உலகப் புகழ்பெற்ற உணவகங்களின் அரங்குகள் அமைய உள்ளன.

இங்கு ஆவின் பாலில் தயாரித்த பால்கோவா, உலகின் உயரமான ஃபலுடா ஐஸ்க்ரீம், ‘உணவை வீணாக்காமல் பகிர்வோம்’ திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பேருக்கு ஒரு வேளை உணவு வழங்குதல்,  ‘உபயோகித்த எண்ணெய்யின் மறுபயன்பாடு’ என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கிலோ லிட்டர் பயன்படுத்திய எண்ணெய்யைச் சேகரித்து பயோ டீசல் தயாரிக்க வழங்குதல் ஆகிய செயல்பாடுகளில் புதிய உலக சாதனைகள் படைக்கப் படவுள்ளன.

இத்திருவிழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாகக் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகளும் நடைபெற உள்ளன.  இந்தப் போட்டிகளில் வென்றவர்க ளுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகளும் அறுசுவை அரசி, அரசன், இளவரசி மற்றும் இளவரசன் போன்ற பட்டங்களும் வழங்கப்பட உள்ளன. போட்டியில் கலந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களையும் பரவசப்படுத்தும் விதத்தில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

உணவுத் திருவிழாவின் இறுதி நாளில், சுதந்திர இந்தியாவின் 75-வது அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, 7.5 கிமீ தூரத்துக்கு ஆவடியில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது. எனவே விதவிதமான உணவு வகைகளை உண்டு ருசிக்க, பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்வுகளைக் கண்டு ரசிக்கப் பொதுமக்கள் அனைவரும் உணவுத் திருவிழாவுக்கு வருகை தரவேண்டும்.  இந்த உணவு திருவிழாவுக்கு அனுமதி இலவசம்.” என அறிவித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.