சென்னை-மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை, யாத்திரையாக டில்லி எடுத்துச் செல்லப்பட உள்ளது.ராணுவ நிகழ்ச்சிக்காக, மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் தமிழகம் வந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், கோவையில் இருந்து ஊட்டிக்கு சென்ற போது, ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.
அவரது நினைவாக, தமிழகத்தில் பிபின் ராவத்துக்கு மார்பளவு ஐம்பொன் சிலை உருவாகி இருக்கிறது. அந்த சிலையை, டில்லியில், ‘இந்தியா கேட்’ பகுதி போர் வீரர்கள் நினைவிடத்தில் வைக்கவுள்ளனர். இந்த சிலையை, முன்னாள் ராணுவத்தினர் நலனுக்கான அறக்கட்டளை தயாரித்துள்ளது.
உதாரண புருஷர்
இது குறித்து, அறக்கட்டளை நிறுவனர், முன்னாள் ராணுவ வீரர் கடலுார் பாபு கூறியதாவது:பிபின் ராவத், இந்தியாவின் முப்படைத் தளபதியாக இருந்தவர். அவருடைய ராணுவ பணி என்பது போற்றத் தகுந்தது. ஒவ்வொரு ராணுவ வீரரும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண புருஷர்.பிபின் ராவத்தின் செயல்பாடுகளைப் போற்றும் வகையில், அவருக்கு மார்பளவு உருவச் சிலையை தமிழகத்தில் அமைத்து, டில்லியில் நிறுவலாம் என முடிவெடுத்தோம்.
120 கிலோ எடை
அதற்கு தேவையான பணத்தை, எங்கள் அறக்கட்டளை வாயிலாகக்கொடுத்து விடலாம். தேவையானால், மக்களிடமும் வசூலித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து, சிலை அமைக்கும் பணியை கும்பகோணத்தில் துவங்கினோம். சிலை அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. சிலை அமைக்கும் பணி துவங்குவதற்கு முன், பிபின் ராவத் படத்தை வைத்து, பூர்ணாஹுதி நடத்தப்பட்டது. 120 கிலோ எடை உள்ள பிபின் ராவத்தின் மார்பளவு ஐம்பொன் சிலையை, விரைவில் டில்லி எடுத்துச் செல்ல உள்ளோம்.சிதம்பரத்தில் இருந்து யாத்திரையாக, ஆறு மாநிலங்களைக் கடந்து, டில்லியை அடைய திட்டம் தீட்டப்பட்டது. அடுத்த மாதம், பிரதமர் மோடி புதுச்சேரி வருகிறார்.
அனுமதி
அவரை வைத்து சிலையை முதலில் திறக்கச் செய்து, பின், ஆறு மாநிலங்கள் வழியாக டில்லி எடுத்துச் சென்று, அங்கே வைக்கப் போகிறோம். சிலை அமைக்க, ராணுவத் தலைமையில் இருந்து அனுமதி கடிதம் வந்து விட்டது.டில்லி நிகழ்வில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதி உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். நாட்டில், ஒரு ராணுவ வீரருக்கு ஐம்பொன் சிலை அமைக்கப்படுவது, இதுவே முதல் முறை.இவ்வாறு அவர் கூறினார்.