கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகம், கேரளா, டெல்லி உட்பட நாடு முழுவதும், இதுவரை, கொரோனா வைரஸ் தொற்றின் மூன்று அலைகள் பரவி விட்டன. இந்த மூன்று அலைகளில் இருந்தும், அனைத்து மாநில அரசுகள் மீண்டு வந்து விட்டன. இதை அடுத்து நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டன. இதன் பின்னர், சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக, தமிழகம், கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் அதிகம் உள்ள தமிழகம், கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை ராஜேஷ் பூஷண் இன்று கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கொரோனா பரவல் சில மாநிலங்களில், மீண்டும் வேகம் எடுத்து வருவது கவலை அளிக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில், மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு மத்திய சுகாதாரத் துறை ஒத்துழைப்பு வழங்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டி மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார். இதைத் தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டில் கட்டுப்பாடுகள் கடுமையாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.