தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவர் மரம் வெட்டும் கூலித் தொழிலைச் செய்து வந்திருக்கிறார். இவர் மனைவி முருகம்மாள். இவர்களுக்கு பெனிஸ்கர் என்ற மகனும், 3 மகள்களும் இருக்கின்றனர். இதில் மகன் பெனிஸ்கர் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பெனிஸ்கர், ஊருக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று காலை மகாராஜன் வீட்டில் தூங்கிய நிலையில் இறந்து கிடந்திருக்கிறார். இதனையடுத்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் மகாராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதலில் சந்தேக மரணம் என போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், மகாராஜனின் கழுத்துப் பகுதியில் நகக்கீறல்கள் இருந்திருக்கின்றன. இதில், போலீஸார் சந்தேகமடைந்தனர். மேலும் மகாராஜனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து சென்னையிலிருந்து திடீரென ஊருக்கு வந்த பெனிஸ்கரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், “நான் சென்னையில் ஒரு கடையில் வேலைப் பார்த்து வந்தேன். அங்க தர்ற சம்பளம் போதுமானதா இல்ல. சொந்த ஊர்ல ஏதாவது தொழில் தொடங்கலான்னு நினைச்சேன். அப்பாவிடம் பணம் கேட்டேன். பணம் தர மறுத்தார். வீட்டையாவது என் பேர்ல எழுதித்தாங்க. அந்தப் பத்திரத்தை பேங்க்ல அடமானம் வச்சு லோன் வாங்கி ஏதாவது தொழில் செஞ்சுக்கிறேன்னு கேட்டேன். அதற்கும் தர மறுத்தார். அவதூறாவும் பேசினார். அம்மா, தங்கை ரெண்டு பேரும் கேட்டும் அவங்களையும் அவதூறாப் பேசினார்.
கோவத்துல கையாலயும், கயித்தாலயும் அப்பாவோட கழுத்தை இறுக்குனேன். அம்மா, தங்கை ரெண்டு பேரும் அவரோடக் காலைப் பிடிச்சாங்க. வீட்டை எழுதித் தராததுனால கொன்றோம்” எனச் சொல்லி போலீஸாரையே அதிர வைத்திருக்கிறார். இதனையடுத்து பெனிஸ்கர், அவர் தாய் முருகம்மாள், தங்கை இசக்கிரேவதி ஆகியோரைக் கைதுசெய்தனர். பின்னர், சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர் போலீஸார்.