புதுடெல்லி: நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் புதிதாக 3,712 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்தது. தினசரி தொற்று பாதிப்பு, 2 ஆயிரத்துக்கு கீழே குறைந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 2,745 ஆக இருந்த தினசரி பாதிப்பு, நேற்று 3 ஆயிரத்தை கடந்தது.
இதுகுறித்து மத்திய சுகாதாரஅமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்: வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 3,712 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பான 2,745-ஐ விட 35.22 சதவீதம் அதிகம். நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,31,64,544 ஆக உயர்ந்தது.
கரோனா தொற்றுக்கு கேரளாவில் 5 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த கரோனா உயிரிழப்பு 5,24,641 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சிகிச்சையில் இருந்து 2,584 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 19,509 பேர் சிகிச்சையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.