லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ.80,000 கோடி மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சி கதைக்கு உத்வேகம் அளிக்கப் போவது உத்தர பிரதேசம் என நம்புகிறேன். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உந்துசக்தியாக உத்தர பிரதேசம் திகழப்போகிறது. ஒரே நாடு- ஒரே வரி, ஒரு நாடு-ஒரே மின்கட்டமைப்பு, ஒரு நாடு- ஒரே மொபிலிட்டி கார்டு, ஒரு நாடு-ஒரே ரேஷன் கார்டு ஆகிய முயற்சிகள் அனைத்தும் எங்களின் திடமான மற்றும் தெளிவான கொள்கைகளின் பிரதிபலிப்பு ஆகும்.
சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவை ஒரு தேசமாக வலுப்படுத்த நாங்கள் உழைத்து வருகிறோம். இன்று உலகம் இந்தியாவின் செயல்திறனைப் பாராட்டுகிறது. ஜி20 நாடுகளின் பொருளாதாரத்தில் நாம் வேகமாக வளர்ந்து வருகிறோம். உலக சில்லறை வர்த்தக குறியீட்டில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது என குறிப்பிட்டார்.
மேலும், குடும்பக் கட்சிகள் எனக்கு எதிராக ஒன்று திரள்கின்றனர். நான் அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன், எனக்கு யாருடனும் தனிப்பட்ட பிரச்சனைகள் இல்லை, நாட்டில் வலுவான எதிர்க்கட்சி தேவை. குடும்பங்களில் சிக்கியுள்ள கட்சிகள் ஜனநாயகத்தை வலுப்படுத்த அதிலிருந்து மேலெழ வேண்டும் என தெரிவித்தார்.