சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குமரிக் கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் 4-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும்.
4-ம் தேதி குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.